வள்ளிபுரம்,சொக்கனூர் ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மருத்துவபரிசோதனை
வள்ளிபுரம்,சொக்கனூர் ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது.
பெருமாநல்லூர்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சில விதிமுறைகளுடன் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளை தவிர 100 நாள் வேலை திட்ட பணிகளானது தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொக்கனூர், வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டமானது தொடங்கியது. இந்த வேலை திட்டத்தில் பணி புரிய வருபவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா? என பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சொக்கனூர், வள்ளிபுரம் ஊராட்சிகளில் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மேற்கொண்ட இந்த பரிசோதனையில் உடல் வெப்பநிலை, இருமல், சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 55 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பியூலா எப்சிபாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) கீதா, வள்ளிபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன், ஊராட்சி செயலர் மூர்த்தி, பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆதித்யா, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசபெருமாள், கிராம சுகாதார செவிலியர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.