திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சந்தேகத்தின் பேரில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2020-05-12 23:15 GMT
திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். 112 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் அந்த 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். 114 பேரும் குணமடைந்த நிலையில் தற்போது திருப்பூர் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் உள்பட பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட சிலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 2 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 7 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை இவர்களுக்கு கொரோனா தொற்று ஏதும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். விரைவில் அவர்களுக்கான முடிவு தெரியவரும். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்