பவானியில் கொரோனா நிவாரன நிதி வழங்கக்கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
பவானியில் கொரோனா நிவாரன நிதி வழங்கக்கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பவானி,
பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம் பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத்தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி சங்க அலுவலக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பி.எம்.கந்தசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், கைத்தறி நெசவாளர்கள் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்து வருவதால் தமிழக அரசின் நலவாரிய உறுப்பினர்கள்.
அனைவருக்கும் நிவாரண நிதியாக மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நிவாரண நிதியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராகி பின்னர் புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் மேலும் ஓய்வு பெற்ற நலவாரிய உறுப்பினர்களுக்கும் நிவாரண நிதியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்டி நிவாரண நிதியையும் நிவாரண பொருட்களையும் வழங்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை மருந்தாளுனர்களையும் அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க செயலாளர் வ.சித்தையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர். டி.ஏ.மாதேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
இதில் சண்முகம், குப்புசாமி, நஞ்சப்பன், ராஜம்மாள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்துகொண்டனர். பவானி நகரில் மொத்தம் 4 இடங்களில் அந்தந்த அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.