தூத்துக்குடியில் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை: விசைப்படகுகள் பழுது பார்க்கும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 400-க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தன. மீன்பிடி தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால், விசைப்படகுகள் அனைத்தையும் கரையில் நிறுத்தி வைத்து உள்ளனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பழுது நீக்கும் பணி
இந்த நிலையில் அந்த விசைப்படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுது நீக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். படகுகளுக்கு பெயிண்ட் அடித்தல், உடைந்த பலகைகளை சரிசெய்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.