திண்டுக்கல்லில் இயல்பு வாழ்க்கை திரும்பியது: அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிக்கு படையெடுத்த பொதுமக்கள் - கார், மோட்டார் சைக்கிள்களில் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்
47 நாட்கள் கழித்து கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதிக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். கார் மோட்டார் சைக்கிள்களில் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதேநேரம் மளிகை, அரிசி, காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. மேலும் நேற்று முதல் 34 வகையான கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் நேற்று 47 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டன. இதில் டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், ஏ.சி. வசதி இல்லாத நகைக்கடைகள், துணிக்கடைகள், கட்டுமான பொருட்கள் கடைகள், மின்சாதன பொருட்களின் கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், ஒர்க்ஷாப்புகள், மோட்டார் பழுதுநீக்கும் கடைகள், பர்னிச்சர் கடைகள் திறக்கப்பட்டன.
இதனால் ஊரடங்கால் விரும்பிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்த மக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மக்கள் சுந்திரமாக வெளியே புறப்பட்டனர். கார்கள், இருசக்கர வாகனங்களில் குடும்பத்துடன் கடைகளுக்கு படையெடுத்தனர். அதிலும் பலர் இருசக்கரங்களில் 3 பேர் பயணித்து கடைகளுக்கு வந்தனர். இதில் சிலர் குழந்தைகளையம் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருசில பெண்கள் முக கவசம் அணியாமல், கணவர் மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேலும் வாகனங்களில் செல்வதற்கு கெடுபிடிகள் அதிகம் இல்லை.
அதேநேரம் கடந்த 1½ மாதமாக வேலையின்றி வருமானம் இல்லாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். இதனால் பர்னிச்சர், மின்சாதன பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் சுமாராகவே இருந்தது. ஆனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆடைகள் விற்பனை செய்யப்படும் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் மாதத்தின் தொடக்க நாட்கள் என்பதால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர். இதனால் மளிகை பொருட்கள் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுதவிர செல்போன், கணினி பழுதுபார்க்கும் கடைகள், ஏ.சி. வசதி இல்லாத செல்போன் கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
அதுபோன்ற கடைகளில் இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், விரும்பிய மாடலில் செல்போன் வாங்க முடியாததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடைகள் திறப்பையொட்டி 47 நாட்களுக்கு பின்னர் திண்டுக்கல் நகரம் களைகட்டியது. மேலும் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் வெளியே வந்து நடமாடியதால் திண்டுக்கல்லில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
அதேநேரம் வியாபாரிகள், கடை பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்க கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால், பொதுமக்களில் சிலர் முக கவசம் அணியாமல் நகரில் வலம் வந்தனர். மேலும் பெரும்பாலான கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கினர். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடியதால் கடைக்காரர்களாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
திண்டுக்கல் நகரில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடித்த நாட்களிலேயே, சிலர் தேவையின்றி வாகனங்களில் வலம் வந்தனர். இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி கடைகளை திறந்ததால், நேற்று வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருந்தது. பொருட்களை வாங்குவதற்கு பலர் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் குடும்பத்துடன் வந்தனர்.
மேலும் வழக்கம் போல் வீட்டில் இருக்க மனமில்லாமல் நகரை சுற்றிபார்ப்பது போல் பல இளைஞர்கள் வாகனங்களில் வலம் வந்தனர். இதனால் திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகள், பழனி சாலை, சத்திரம் சாலை உள்பட முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று நெரிசலை சரிசெய்தனர்.