கொடைக்கானல், பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் நெதர்லாந்து நாட்டு பூக்கள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், நெதர்லாந்து நாட்டு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கியதும், ஆண்டு தோறும் மே மாதத்தில் மலர்க்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மே மாதத்தில் மலர்க்கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமான பூச்செடிகள் பல்வேறு கட்டங்களாக நடவு செய்யப்பட்டன. இந்த நிலையில் கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கியுள்ளது. நகரில் பகல் நேரத்தில் இதமான வெப்பத்துடன் மேகமூட்டம் காணப்படுகிறது. இதற்கிடையே பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட பூச்செடிகளில் கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆண்டு மலர்க்கண்காட்சி நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது. மேலும் பூங்காவும் மூடப்பட்டிருப்பதால் வெளியாட்கள் யாரும் இங்கு மலர்ந்துள்ள பூக்களை பார்வையிட முடியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, நெதர்லாந்து நாட்டில் இருந்து கொடைக்கானலுக்கு கொண்டுவரப்பட்ட ஓரியண்டல் லில்லியம் என்றழைக்கப்படும் பூச்செடிகள் பிரையண்ட் பூங்காவில் பசுமை குடில் அமைத்து நடவு செய்யப்பட்டன. இந்த செடிகள் தற்போது பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன. இதில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் மலரும் பூக்கள் காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது.
அத்துடன் பிரையண்ட் பூங்காவில் தற்போது சால்வியா, டெல்பனியம், பிளாக்ஸ், பேன்சி, மேரிகோல்டு கேலண்டுல்லா, பிகோனியா உள்பட பல்வேறு வகை பூக்கள் லட்சக்கணக்கில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களை சமூக இடைவெளியுடன் பார்வையிட உள்ளூர் மக்களையாவது அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.