ஊரடங்கு உத்தரவு தளர்வு: இயல்பு நிலைக்கு திரும்பிய பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்கள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.

Update: 2020-05-12 06:17 GMT
பெரம்பலூர், 

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மருத்துவமனை, மருந்தகம், காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையம் (குறிப்பிட்ட நேரம் மட்டும் விற்பனை), உணவகங்கள் (பார்சல் மட்டும்) ஆகியவற்றை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தனியார் நிறுவனங்களும் செயல்படவில்லை. இதனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்கள் வருமானமின்றி வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகம், மருத்துவமனை, பால் விற்பனை நிலையங்கள் மட்டும் இயங்கின. இதற்கிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை இயங்குவது தடை செய்யப்பட்டு, நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் தமிழக அரசு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 34 வகை கடைகளை திறக்க உத்தரவிட்டது.

டீக்கடைகள் திறப்பு

இதில் அந்த கடைகள் அனைத்தும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று முதல் திறக்கப் பட்டது. இதனால் 47 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு படையெடுத்தனர். இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. மேலும் அந்தப்பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. டீக்கடைகள் (பார்சல் மட்டும்) திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. சில கடைகளில் அங்கேயே குடிப்பதற்கு டீ வழங்கப்பட்டது.

பூ, பழக்கடைகள் திறக்கப்பட்டது. கட்டுமானபொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்டு, ஹார்டுவேர் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மோட்டார் எந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைகடைகள், சிறிய ஜவுளி கடைகள், மிக்சி கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டி.வி. விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் ஆகியவையும் திறந்திருந்ததால், அங்கேயும் பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது.

33 சதவீத பணியாளர்களுடன்...

அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லாததால், அவைகள் திறக்கப்படவில்லை. மேற்கண்ட கடைகள் அனைத்தும், அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கடைகள் திறந்து வியாபாரம் செய்து அடைக்கப்பட்டது. அரியலூரில் நேற்று வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. மொத்தத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

மேலும் செய்திகள்