சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-12 06:09 GMT
பெரம்பலூர், 

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் பிழைப்பு தேடி தமிழகம் வந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றியும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதனால் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து ஓட்டல்கள், கல்குவாரிகளில் வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணீர் மல்க...

அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கினால் வேலை ஏதுவும் இல்லாததால் வருமானமின்றி, சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வருகிறோம். சொந்த ஊரிலும் எங்களது குடும்பத்தினர் வறுமையில் வசித்து வருகின்றனர். இதனால் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

மேலும் தமிழக அரசு அனுமதி கொடுத்தால் போதும் நாங்கள் கடன் வாங்கியாவது பஸ்சை வாடகைக்கு பிடித்தோ அல்லது ரெயில் மூலமோ சொந்த ஊருக்கு போய்விடுவோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்