வடமாநிலத்தில் இருந்து வந்த 62 பேருக்கு கொரோனா பரிசோதனை
வடமாநிலத்தில் இருந்து வந்த 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ராமநாதபுரம்,
நாடுமுழுவதும் கொரோனா பரவலை தடுக்க மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வந்தனர். இவ்வாறு தவித்து வருபவர்களை சிறப்பு அனுமதியுடன் அவரவர் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அரசின் ஏற்பாட்டின்பேரில் அங்கிருந்து ராமநாதபுரம் வந்துள்ளனர்.
இவ்வாறு நேற்று முன்தினம் இரவு முதல்கட்டமாக ஒருபெண் உள்பட 37 பேர் ராமநாதபுரம் வந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை முகம்மது சதக் கல்வி நிறுவன கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அடுத்த கட்டமாக வந்த 17 பேர் கமுதக்குடி கல்வியியல் கல்லூரியிலும், 8 பேர் முதுகுளத்தூர் அரசு பள்ளி கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்து அதன்பின்னர் அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் ராமநாதபுரம் வந்தவண்ணம் உள்ளதால் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.