மராட்டியத்தில் இருந்து கரூர் வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று இல்லை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்
மராட்டியத்தில் இருந்து கரூர் வந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.;
குளித்தலை,
மராட்டியத்தில் இருந்து கரூர் வந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
மராட்டியத்தில் இருந்து வந்தனர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு படிப்பு, வேலை தொடர்பாக சென்றவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப முடியாத நிலை இருந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால், அவர்கள் ரெயில் மூலம் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். பின்னர் அவர்கள் பஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 2 ஆண்கள், 7 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் நேற்று முன்தினம் பஸ் மூலம் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆண்கள் ஆன்லைன் வேலை தொடர்பாகவும், பெண்கள் படிப்பு தொடர்பாக மராட்டியத்திற்கு சென்றவர்கள் ஆவார்கள்.
பரிசோதனை
கரூர் வந்த அவர்கள் 9 பேரும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்பேரில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்த் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் அறிவுரைகள் வழங்கி, அவர்கள் 9 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். அவர்களுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்து கூறினர். மேலும் அவர்களுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்
மேலும் அவர்களுடைய பெற்றோர் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுடன் அந்த 9 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர். இந்த 9 பேரில் ஒரு பெண் கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர். 4 பேர் தோகைமலையை சுற்றியுள்ள பகுதியையும், 4 பேர் இனுங்கூரை சுற்றியுள்ள பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவார் கள்.