கரூரில் 80 சதவீத கடைகள் திறப்பு சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது
கரூரில் நேற்று 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
கரூர்,
கரூரில் நேற்று 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் ஏற்றுமதி நிறுவனங்கள், பஸ் கூண்டு கட்டும் பணிகள், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டதால் நகர்ப்புறங்களில் 30 சதவீத தொழிலாளர்களை கொண்டு அந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் சில தொழில்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாவட்டத்தில் சிறிய அளவிலான துணி கடைகள், பர்னிச்சர் கடைகள், மரக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் விற்பனை நிலையங்கள், பெயிண்ட் கடைகள், காலணி விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் கோவை ரோடு, ஜவஹர் பஜார், காந்தி கிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 80 சதவீத கடைகள் திறந்து இருந்ததால், சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
முக கவசம் அணிய அறிவுறுத்தல்
டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்பதால் பல டீ கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. குறைந்த அளவிலான டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அந்த கடைகளிலும் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டதால் விற்பனை குறைவாகவே இருந்தது.
துணி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து, கைகளை சுத்தம் செய்த பின்னர் முக கவசம் அணிந்து கடைக்குள் வருமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டாலும் அனைத்து கடைகளிலும் குறைந்த அளவிலேயே விற்பனை நடைபெற்றது. சாலைகளில் அவ்வப்போது போலீசார் ஒலி பெருக்கி மூலம் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். வாழை மண்டியில் ஏலம் நடைபெற்றாலும், குறைவான அளவிலேயே வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு அமல் போன்றவற்றை தொடர்ந்து, தற்போது பொதுமக்கள் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புவதை காண முடிகிறது.