மகாராஷ்டிராவில் தவித்த விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 77 பேர் மீட்பு

மகாராஷ்டிராவில் தவித்த விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 77 பேர் மீட்கப்பட்டு சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை முகாம்களில் தங்க வைத்து கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2020-05-12 02:59 GMT
கள்ளக்குறிச்சி,

கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் சிக்கி தவித்து வந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அம்மாநில அரசுடன் பேசி பஸ் மூலமாக தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 38 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 39 பேர் என மொத்தம் 77 பேர் மீட்கப்பட்டு பஸ்கள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் கர்நாடக மாநிலம் வழியாக கிருஷ்ணகிரிக்கு வந்தடைந்தனர். பின்னர் விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களை மாநில எல்லையில் வைத்தே காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்று சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்களை அங்கிருந்து சிறப்பு பஸ்கள் மூலமாக சேலம் வழியாக விழுப்புரத்திற்கு அழைத்து வந்தனர்.

கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 பேரை விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மையத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 14 நாட்கள் தங்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 39 பேரை அம்மாவட்ட நிர்வாகத்திடம் பேசி அங்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்