அரசு சுற்றுலா துறை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவர ஓராண்டு ஆகும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசு சுற்றுலா துறைக்கு ஓராண்டு ஆகும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

Update: 2020-05-12 02:17 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் இதுவரை 4,364 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவில் 4,273 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இந்தநிலையில் நாளை (அதாவது இன்று) முதல் நாடு முழுவதும் ரெயில் சேவை தொடங்க உள்ளது. டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் புதுச்சேரி திரும்ப வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் சுமார் 5 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் பரிசோதனை நடத்துவது கஷ்டம். அதற்கு தேவையான மனிதவளம் நம்மிடம் இல்லை. மேலும் நிறைய மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணிநேரமும் பணி புரிய வேண்டியிருக்கும்.

அதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று வெளியே வராமல் தனித்து இருக்கவேண்டும். வீட்டில் இருப்பவர்களுடனும் வெளியில் இருந்து வருபவர்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்தால் மட்டுமே புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரும். இல்லையென்றால் தற்போது 1, 2 என இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

பணம் இல்லை

புதுச்சேரியில் இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அதற்கான கோப்புகளை தயாரித்து அனுப்பினால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்படுகிறது. இது தொடர்பாகவும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் பேச உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யாததால் பணம் எதுவும் இல்லை.

மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்க ரூ.6 கோடி நிதி தேவைப்படுகிறது. அதில் ரூ.4 கோடி பற்றாக்குறையாக உள்ளது. அரிசிக்கான தலைப்பில் பணம் இல்லை. பட்ஜெட்டில், அந்த தலைப்பில் பணம் ஒதுக்கி, அரிசியை வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம்.

6 மாத காலம் ஆகும்

மத்திய அரசிடம் பெற்ற கடனும், அதற்கான வட்டியுமாக சேர்த்து ஆண்டிற்கு ரூ.1,300 கோடி செலுத்த வேண்டியுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்பை கணக்கில் கொண்டு மத்திய அரசு கடன் மற்றும் அதற்கான வட்டியை இந்த ஆண்டு கேட்காமல் தள்ளி வைக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து பிற மாநிலங்கள் விரைவில் மீண்டாலும் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க இன்னும் 6 மாத காலம் ஆகும். ஏனென்றால் புதுச்சேரியில் பொருட்களை உற்பத்திச் செய்வதற்கு தேவையான கச்சா பொருட்கள் ஏதும் இல்லை. அதுபோல் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததைப்போல் சுற்றுலா துறை மீண்டு வருவதற்கு ஒரு ஆண்டுகாலம் ஆகும். இதனால் ஓட்டல், படகுத் துறை, விடுதிகளில் இருந்து வரவேண்டிய வரி வருவாய் அரசுக்கு வராது.

ஊக்கத்தொகை

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை அடையாளம் கண்டு வருகின்றோம். தியாகம் செய்யும் அளவிற்கு பணிபுரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வோம். மேலும் விடுமுறை எடுத்துச் சென்றவர்களைத்தவிர கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்