கோவையில் முகக்கவசம், கையுறை விற்பனை அமோகம்
கோவையில் முகக்கவசம், கையுறை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.;
கோவை,
கொரோனா தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள முக்கியமாக அணிந்து கொள்ள வேண்டிய தடுப்பு உபகரணமாக முகக்கவசம் உள்ளது. இந்த முகக்கவசங்கள் நேரடியாக கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கு மூலம் நம் உடலுக்குள் நுழைவதை தடுக்கும். இதுபோல் கையுறைகள் மிகவும் அவசியமான உபகரணமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பயன்படுத்தும் தரமான முகக்கவசங்களுக்கு கொரோனா தொற்று தொடங்கிய காலகட்டத்திலேயே தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து பலரும் துணிகளில் முகக்கவசம் அணிய தொடங்கினார்கள். தற்போது துணிகளில் பல்வேறு வண்ணங்களில் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். கோவை அவினாசி ரோடு, டவுன்ஹால், ராமநாதபுரம், பாப்பநாயக்கன்பாளையம், ராஜவீதி, பீளமேடு, நியூசித்தாபுதூர், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, ரெயில்நிலையம் அருகே, கலெக்டர் அலுவலகம் அருகே, சுங்கம் என்று பல இடங்களிலும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் விற்பனை செய்ய தற்காலிக கடைகள் முளைத்து உள்ளன. இவற்றில் விற்பனை அமோகமாகவே உள்ளது.
இங்கு பல்வேறு நிறங்களில் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் கிடைக்கின்றன. இதுபோல் பலரும் ஆங்காங்கே நின்று கொண்டு கைகளில் முகக்கவசங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான ஒரு பொருளை உடனடியாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் பொதுமக்களுக்கும், அதை விற்பவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது.
எனினும், இந்த முகக்கவசங்கள் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தரமானதா? என்பதை அதிகாரிகள் சோதித்து அதன் அடிப்படையில் வினியோகிக்க அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால், முகக்கவசம் அணிந்தும் பாதிப்பினை தடுக்க முடியவில்லை என்ற நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.