அதிகாரிகள் கெடுபிடி: எல்லைப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லும் கேரள மக்கள்

கேரள எல்லையில் அதிகாரிகள் கெடுபிடி செய்வதால், இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் பொருட்களுடன் கேரள மக்கள் நடந்து சென்று அவதிப்படுகின்றனர்.

Update: 2020-05-11 22:15 GMT
கோவை,

கேரள மாநில மக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வசித்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலைஇன்றி தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்கிறார்கள். இதுதவிர வெளி மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவை வழியாக வாளையார் எல்லைக்கு வருகிறார்கள்.

பெரும்பாலானோர் அந்தந்த மாநில இ-பாஸ் அனுமதி பெற்று இருந்தாலும் கேரள அதிகாரிகள் கேரளாவுக்குள் அவர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் வாளையார் எல்லைப்பகுதியில் கைக்குழந்தைகளுடனும், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களுடனும் கேரளாவுக்குள் செல்லமுடியாமல் தவித்து வருகிறார்கள். இது குறித்து சிலர் கூறியதாவது:-

வாகனங்களில் வருபவர்களை வாளையார் பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு வாகனங்கள் சென்றுவிடுகின்றன. வாகனத்தில் இறங்கியவர்கள் மெயின்ரோடு வழியாக கேரள எல்லைவரை நடந்து செல்கிறார்கள். அங்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதிக்கிறார்கள். காய்ச்சல் இல்லை என்றால் கேரள எல்லைப்பகுதிக்குள் நடந்து செல்ல அனுமதிக்கிறார்கள். அங்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றபின்னர் சில வாகனங்கள் இதற்காகவே காத்திருக்கின்றன. அந்த வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி ஊர் சேர்ந்தால் போதும் என்று பலரும் சிரமத்துடன் செல்கிறார்கள்.தமிழக எல்லைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமும், கேரள எல்லைப்பகுதிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரமும் மொத்தம் 2 கிலோ மீட்டர் தூரம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்துசெல்வதும், பெண்கள் உள்பட பலர் கைக்குழந்தைகளையும், பொருட்களையும் சுமந்து கொண்டு செல்வது பரிதாபகரமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்