அரசு அனுமதித்த கடைகள் திறப்பு: நகைக்கடைகளை அடைக்க கூறிய போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதம் - ஊட்டியில் பரபரப்பு

நீலகிரி மாவட்டத்தில் அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டன. ஊட்டியில் நகைக்கடைகளை அடைக்க கூறிய போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-11 22:00 GMT
ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் 34 வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டன. ஊட்டி ஏ.டி.சி. மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் திறந்தவெளி சந்தைகள் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. மற்ற தனிக்கடைகள் நேரம், நேரம் செல்ல ஒவ்வொன்றாக திறந்து செயல்பட தொடங்கியது. டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், ஹார்டுவேர், இஸ்திரி, மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்கும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், பெட்டி கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டன.

ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு தள்ளுவண்டி கடைகள் போடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் நாட்டு மருந்து விற்பனை கடைகள் செயல்பட்டது. ஊட்டி புளுமவுண்டன் சாலையில் அரசு அனுமதித்த சிறிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைளை வியாபாரிகள் திறந்து இருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் கடைகளை அடைக்குமாறு கூறினர். அதற்கு வியாபாரிகள் தமிழக அரசு கடைகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது என்று நாளிதழ்களில் வந்த செய்திகளை காட்டினர். இதனால் போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் வியாபாரிகள் சங்கத்தினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊட்டி நகரில் அனுமதிக்கப்பட்ட கடைகள் சில திறந்து இருந்தாலும், கிராமப்புறங்களில் கடைகள் திறக்கப்படவில்லை.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை திறந்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியாகும். மேலும் அங்கு கடைகள் நெருக்கமாக உள்ளதால், திறப்பது சாத்தியம் இல்லை. அதனால் விலக்கு அளிக்கப்பட்ட ரேஷன் கடைகள், மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஆனால், வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. கூடலூரில் அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததோடு வாகன போக்குவரத்தும் மிகுந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்