கர்நாடகத்துக்கு, 31-ந் தேதி வரை விமான சேவை வேண்டாம் - பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கோரிக்கை

கர்நாடகத்துக்கு வருகிற 31-ந் தேதி வரை விமான சேவை வேண்டாம். பாதிப்பு அதிகம் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு தொலை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும் மாவட்டங்களை நிற அடிப்படையில் அடையாளப்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்தார்.

Update: 2020-05-12 00:24 GMT
பெங்களூரு, 

கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்த்துவது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பஞ்சாப், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள், பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன. இந்த கூட்டத்தில் முதல்- மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனால் அந்த வைரஸ் பரவுவது கட்டுக்குள் உள்ளது. இந்த வைரசை முழுமையாக கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை

கர்நாடகத்துக்கு வருகிற 31-ந் தேதி வரை விமான சேவை வேண்டாம். முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கர்நாடகத்தில் தற்போது 36 கொரோனா பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 6,000 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்துள்ளோம்.

இந்த மாத இறுதிக்குள் கொரோனா பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் இதுவரை 93 ஆயிரத்து 723 சுகாதார பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்துள்ளோம். மாநிலத்தில் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

வழிகாட்டுதல்கள்

பொதுமக்கள் புதிய வாழ்க்கை முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த கொரோனா வைரஸ், நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அபாயகரமானது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டங்களை நிற அடிப்படையில் அடையாளப்படுத்தக்கூடாது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை அதாவது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே தடை செய்ய வேண்டும்.

அந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மற்ற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வர முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமை முகாமில் வைப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். கொரோனாவால் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது.

தனியார் மருத்துவமனைகள் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கொரோனா பரிசோதனை குறித்து ஒரு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

தொலை மருத்துவ முறை

10 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளியாக சேருபவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தொலை மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானவர்களை மட்டும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது, தனிமனித சுகாதாரம், சமுதாய சுகாதாரத்தை பின்பற்றி புதிய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, உடல்நலத்துடன் இருப்பவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி தொலை மருத்துவ முறை மூலம் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்