தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுமையாக காட்சியளிக்கும் மரங்கள் தொடர்ந்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊரடங்கால், வாகன புகை படியாமல் தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பசுமையாக காட்சியளிக்கும் மரங்களை தொடர்ந்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-11 22:38 GMT
அய்யம்பேட்டை, 

ஊரடங்கால், வாகன புகை படியாமல் தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பசுமையாக காட்சியளிக்கும் மரங்களை தொடர்ந்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பல்வேறு வகைகளிலும், பலதரப்பினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல.

அதே நேரத்தில் இந்த ஊரடங்கால் ஒரு சில நல்ல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் நிகழ்ந்துள்ள ஒரு நல்ல மாற்றத்தை இங்கே காண்போம்!.

சாலையின் இருபுறங்களிலும் மரங்கள்

தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, திருவையாறு-கும்பகோணம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் உள்ளன. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் இந்த மரங்களின் நிழலில் நின்று சற்று இளைப்பாறி செல்வது வழக்கம்.

மேலும் வியாபாரிகள் சிலர் காய்கறிகள், பழங்கள், குளிர்பான கடைகள், பெட்டிக்கடைகளை இந்த மரங்களின் கீழ் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

பசுமையாக காட்சியளிக்கிறது

வாகன போக்குவரத்து காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையோர மரங்களின் இலைகளில் வாகனங்களின் புகை படிந்தும், மண் படிந்தும் காணப்படும். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இந்த சாலைகள் அதிக அளவில் வாகன போக்குவரத்து இல்லாமல் இந்த சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த சாலைகளில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில கார்கள், கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதனால் இந்த சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்கள் வாகனங்களின் புகை படியாமலும், தூசி படியாமலும் பச்சைப்பசேல் என்று பசுமையாக காட்சியளிக்கிறது.

பராமரிக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

எப்போதும் வாகன போக்குவரத்தால் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மரங்களின் இலைகள், கிளைகள் புகை படிந்து காட்சி அளிக்கும். ஊரடங்கு காரணமாக இந்த மரங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் சுத்தமான காற்றும் கிடைக்கிறது.

வாகன இரைச்சல் இல்லாத காரணத்தால் தற்போது மரங்களில் பறவைகளும் அதிக அளவில் கூடு கட்டி வாழ்கின்றன. மேலும் இந்த மரங்களின் ஆயுள் காலமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையோர மரங்களை தொடர்ந்து பராமரிக்க பணியாளர்களை நியமித்து மரங்களில் வரிசை எண்கள் எழுத வேண்டும். வாகன போக்குவரத்து தொடங்கியவுடன் இந்த சாலையோர மரங்களுக்கு நூறு நாள் வேலை திட்ட பயனாளிகள் மூலமும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் ஊற்றி நன்கு பராமரிக்க வேண்டும்.

மரக்கன்றுகள்

மரங்கள் இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை நட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேபோல் இந்த நெடுஞ்சாலைகளிலும் மரங்கள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்