ஒரு நபர், இரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி அளவு குறைக்கப்படவில்லை அமைச்சர் காமராஜ் பேட்டி
ஒரு நபர், இரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடி,
ஒரு நபர், இரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
கொரோனா நிவாரண தொகுப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் உள்ளிக்கோட்டை பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நலிவடைந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 2 ஆயிரம் பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
ரஜினி கருத்துக்கு பதில் தேவையில்லை
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 பேரில் 29 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு கூறும் வரையில் சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களில் பொதுமக்கள் சாப்பிடுவதற்கான தொகையை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகம் இந்த மாதம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 400 வழங்கி உள்ளது. மதுக்கடை திறப்பது குறித்த ரஜினிகாந்தின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு பதில் சொல்ல தேவை இல்லை.
அரிசி அளவு குறைக்கப்படவில்லை
மே மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் 70 சதவீத மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஒரு சில ஊடகங்களில், ஒரு நபர், இரு நபர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரிசி அளவு குறைக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது. எந்த சூழலிலும் அரிசியின் அளவு குறைக்கப்படவில்லை.
கடந்த மாதம் 27-ந் தேதி உணவுத்துறை கூடுதல் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில், ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசியும், ஒரு பெரியவர், ஒரு சிறியவர் என்றால் அவர்களுக்கு இந்த மாதம் 20 கிலோ அரிசியும் வழங்கப்படும். ஒரு பெரியவர், இரண்டு சிறியவர் என்றால் இந்த மாதமும் அடுத்த மாதமும் 39 கிலோ அரிசியும் வழங்கப்படும். இரு நபர் கார்டுதாரர்களுக்கு இந்த மாதமும், அடுத்த மாதமும் 20 கிலோ அரிசி வழங்கப் படும் என தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோ அரிசியும், இரு நபர் அட்டைக்கு 20 கிலோ அரிசியும் தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.