கொரோனா வைரஸ் தொற்று எதிரொலி: மீஞ்சூர் சாலைகள் முழுவதும் மூடப்பட்டது - வியாபாரிகள் கடைகளை திறக்க முயன்றதால் நடவடிக்கை
மீஞ்சூரில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தடையை மீறி கடைகளை திறக்க முற்படுவதாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிகாததாலும் சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டது.
மீஞ்சூர்,
மீஞ்சூர் ஒன்றியம் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மாநாடு சென்றவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 8 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்த பின்னர் வீடு திரும்பினர். இதனை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், மீஞ்சூர் பேரூராட்சி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க பேரூராட்சி சாலைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர் சாலை மூடல்
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள் அருகில் உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தடையை மீறி கடைகளை திறக்க முற்படுவதாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் முரண்பாடு காணப்படுவதாலும் மீஞ்சூர் சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைகளை வியாபாரிகள் யாரும் திறக்கக் கூடாது.
மேலும், மீஞ்சூர், பொன்னேரியில் உள்ள பழவேற்காடு, நந்தியம்பாக்கம், ஜெயராமபுரம், வெள்ளிவாயல்சாவடி ஆகிய கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றியத்தில் இதுவரை 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 14 பேர் வீடு திரும்பிய நிலையில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் இருமல் சளி ஆகிய அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகவேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.