போக்குவரத்தை தொடங்க ஆயத்தப்பணிகள் தீவிரம்: தயார் நிலையில் அரசு பஸ்கள்

பஸ் போக்குவரத்தை தொடங்க ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அரசு பணிமனைகளில் தயார் நிலையில் உள்ள பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-05-11 23:15 GMT
நெல்லை, 

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பஸ்களும் இயக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரெயில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இயங்க தொடங்கும் என மத்திய ரெயில்வே துறை அறிவித்துள்ளது. அதற்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது.

வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. குளிர்சாதன வசதியுடன் கூடிய கடைகள், சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஊரடங்கிற்கு பிறகு வருகிற 18-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட கட்டுப்பாட்டின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. நெல்லையில் 3 பணிமனைகளும், பாபநாசம், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், சேரன்மாதேவி, திசையன்விளை, கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 18 இடங்களிலும் பணிமனைகள் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பஸ்கள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அந்த பஸ்களை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. தற்போது அந்த பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பஸ்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. 18-ந் தேதி அரசு பஸ்களை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம். அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பாபநாசம் பணிமனை

பாபநாசம் அரசு பணிமனையில் நேற்று பஸ்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கோபால குமரேசன், மகேஸ்வரன், அருணாச்சல முருகன் ஆகியோர் தலைமையில் பஸ்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பணிமனை வாயில், அலுவலகம் மற்றும் ஓய்வறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த பஸ்களை பராமரிப்பதற்காக ஒரு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் மற்றும் தூய்மை பணியாளர் உள்ளிட்ட 5 பேர் தினமும் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இவர்கள் அந்த பஸ்களை இயக்கியும், கிருமிநாசினி தெளித்தும் பராமரித்து வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 பணிமனைகளில் மொத்தம் 326 பஸ்கள் உள்ளன. விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், பஸ்களை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே தொடர் பராமரிப்பில் இருப்பதால் பஸ்களில் எந்தவித பழுதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் பஸ்களை மீண்டும் இயக்கியும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா? என்பது குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்