தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-11 22:45 GMT
வள்ளியூர், 

வள்ளியூர் பகத்சிங் பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் சிறப்பு தொகுப்பு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் நிதியை உடனே வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். வள்ளியூர் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வேம்பு சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலைமுருகன், சந்தனமுத்து, கண்ணன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 14 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நெல்லை மாவட்ட விவசாய சங்க செயலாளர் பெரும்படையார் தலைமை தாங்கினார். ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு பொறுப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முத்துவேல், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன், ஒன்றிய குழு உறுப்பினர் அயூப்கான், அப்பாத்துரை, கருணாகரன், சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வடிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகுமார், மூர்த்தி, மைதீன் பிச்சை, மாதர் சங்க மாவட்ட தலைவி செல்வி, ஒன்றிய தலைவி மருவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்