கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது திருப்பூர்: விரைவில் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறுகிறது

கொரோனா பாதித்த 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது. இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து விரைவில் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறுகிறது.;

Update: 2020-05-11 23:30 GMT
திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு நாட்களில் 112 பேர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு பின்னர் பல்வேறு கட்டங்களாக குணமடைந்து 112 பேரும் வீடு திரும்பினர்.

இதன் பின்னர் சில நாட்கள் திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இதனால் விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறி விடும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சைக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதன்படி இடுவாயை சேர்ந்த 2 லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்தது.

இதன் பின்னர் இடுவாயை சேர்ந்த 2 லாரி டிரைவர்களும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே கடந்த 10 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுபோல் யாரும் கொரோனாவால் திருப்பூர் மாவட்டத்தில் உயிரிழக்கவும் இல்லை.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாரி டிரைவர்கள் 2 பேரும் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி 2 லாரி டிரைவர்களும் சிகிச்சை முடிந்து நேற்று காலை கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். மேலும், இவர்கள் இருவரும் டாக்டர்களின் கண்காணிப்பில் 14 நாட்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் காரணமாக 114 பேர் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்த நிலையில், அனைவரும் தற்போது குணமடைந்துள்ளதால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது.

மேலும், தற்போது கடந்த 9 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதுபோல் 114 பேரும் குணமடைந்துள்ளதால், சிவப்பு மண்டலத்தில் இருந்த திருப்பூர் ஆரஞ்சு மண்டலத்திற்கு விரைவில் மாற உள்ளது. அதாவது கொரோனா தொற்று 14 நாட்களுக்கு மாவட்டத்தில் யாருக்கும் உறுதி செய்யப்படாத நிலையிலும், 15 பேருக்கு குறைவாகவும் கொரோனா பாதித்தவர்கள் இருந்தால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும். திருப்பூரில் கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்பு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி வரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும். மேலும், 21 நாட்கள் வரை கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படாமல் இருந்தால், பச்சை மண்டலத்திற்கு மாறும்.

தற்போது திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுதவிர மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறவர்கள் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவ பணியாளர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி ஏற்படவில்லை. இதனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும், ஆனால் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்