கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு: அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு உதவிய ஆசிரியர்கள்

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர்.

Update: 2020-05-11 22:45 GMT
திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க ஒருவர் வெளியே வர வேண்டும்.

அவ்வாறு வருகிறவர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை அரசு வழங்கியது. இந்த கொரோனாவின் காரணமாக பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பலர் கூலி வேலை செய்து வந்தனர். கொரோனாவின் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி சார்பில் உதவி செய்ய தலைமை ஆசிரியர் அகிலா முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் தங்களால் முடிந்த நிதி உதவி செய்தனர். மொத்தம் ரூ.25 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரூ.25 ஆயிரத்திற்கு வாங்கப்பட்டது. இந்த பொருட்களை பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், ஊராட்சி வார்டு உறுப்பினர் செந்தில்குமார், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் நடராஜ், தலைமை ஆசிரியர் அகிலா ஆகியோர் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்