ஊரடங்கு மேலும் தளர்வு: தென்காசியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன - மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

ஊரடங்கு மேலும் தளர்வு செய்யப்பட்டதால் தென்காசியில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

Update: 2020-05-11 22:45 GMT
தென்காசி, 

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டது. 

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் வெளியே வர வேண்டும். மற்ற காரணங்களுக்கு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு கொண்டு வரப்பட்டது. நேற்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டது.

அதன்படி நேற்று தென்காசியில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகளை சேர்த்து புதிதாக டீக்கடைகள், எலக்ட்ரிக் சாதன கடைகள், ஷாப் கடைகள், சிறிய நகைக்கடைகள், ஹார்டுவேர்ஸ், கம்ப்யூட்டர் பழுது நீக்கும் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன. பெரிய ஜவுளிக்கடைகள், சினிமா திரையரங்குகள், மால்கள், சலூன் கடைகள் போன்றவை திறக்க அனுமதிக்கப்படவில்லை. டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. கடை முன்பு கூட்டமாக நிற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான நகைக்கடைகள் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. பொதுமக்களும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது. 

நேற்று திங்கட்கிழமை என்பதால் வங்கிகளிலும் கூட்டம் இருந்தது. அவர்கள் வரிசையாக நின்று வங்கிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்