ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடல்: வருமானம் இன்றி தவிக்கும் இளம் வக்கீல்கள் - நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு உள்ளதால் இளம் வக்கீல்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-05-11 22:45 GMT
திருச்செந்தூர்,

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வக்கீல்களின் பங்கு மகத்தானது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மற்றும் பாலகங்காதர திலகர், ராஜாஜி, லாலா லஜபதிராய், மதன் மோகன் மாளவியா, மோதிலால் நேரு போன்ற எண்ணற்ற தலைவர்கள் வக்கீல்களாக தன்னலமற்று பணியாற்றியும், தேச விடுதலைக்காக போராடியும் வெற்றி கண்டனர்.

நமது நாட்டின் ஜனநாயகத்தை தாங்கும் நான்கு தூண்களில் சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், சட்டத்தை காக்கும் நீதிமன்றம், அரசு நிர்வாகம், ஊடகம் ஆகியவற்றில் நீதிமன்றம் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. நீதிமன்றத்தில் வழக்குதாரர்களுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை நுட்பமாக அறிந்து இருப்பதுடன் ஞாபகத்திறன், பகுத்தறியும் திறன், சிக்கலை தீர்க்கும் திறன் உள்ளிட்ட தனித்திறன்களுடன் விளங்குகின்றனர். மேலும், உலக நாடுகளின் தலைவர்களாக சிறந்து விளங்கிய ஆபிரகாம் லிங்கன், பராக் ஒபாமா, பில் கிளிண்டன் போன்றவர்களும் தலைசிறந்த வக்கீல்களாகவும் சேவையாற்றினர்.

வருமானம் இன்றி தவிப்பு 


இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகங்களில் படித்த வக்கீல்கள், இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று, இளம் வக்கீல்களாக பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் வக்கீல்கள் சட்ட அலுவலகங்களை நடத்தி வருகின்றனர். அங்கு வரும் வழக்குதாரர்களுக்கு வழக்கின் தன்மையை எடுத்துரைத்து, போதிய ஆவணங்களை சேகரித்து, நீதிமன்றத்தில் பதிவு செய்து முறையிட்டு வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு உள்ளன. சில குறிப்பிட்ட அத்தியாவசிய வழக்குகளை மட்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அதனை நீதிபதிகள் காணொலிக்காட்சி மூலம் விசாரித்து வருகின்றனர். இதற்காக வக்கீல்களின் செல்போன்களில் ‘வித்யோ‘ என்ற பிரத்யேக செயலி நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் அத்தியாவசிய வழக்குகளை காணொலிக்காட்சி மூலம் நீதிபதிகள் விசாரிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக அனைத்து ஊர்களிலும் உள்ள வக்கீல்களின் சட்ட அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இளம் வக்கீல்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் வக்கீல்கள் சங்க துணைத்தலைவர் வக்கீல் முத்துகுமார் கூறியதாவது:–

நிவாரண உதவி

கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சில குறிப்பிட்ட அத்தியாவசிய வழக்குகளை மட்டும் நீதிமன்ற நேரத்தில் காணொலிக்காட்சி மூலம் நீதிபதிகள் விசாரிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் மூலமே வழக்குகளை நீதிமன்றங்களில் பதிவு செய்து வருகிறோம். ஊரடங்கால், வக்கீல்களின் சட்ட அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இளம் வக்கீல்கள் போதிய வருமானம் இல்லாமல் வாடும் நிலை உள்ளது.

எனவே, இளம் வக்கீல்களுக்கு அரசு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கால் நிலுவையில் உள்ள வழக்குகளும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே ஊரடங்கு தளர்வின்போது, நீதிமன்றங்களை மீண்டும் திறக்க வேண்டும். அங்கு சுகாதாரமான முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்ற வக்கீல்கள் தயாராக உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பிலும், அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்