மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை கண்டித்த கார் டிரைவர் கல்லால் தாக்கி கொலை
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை கண்டித்த கார் டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் போடிநாயக் கன்பட்டியை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 56). கார் டிரைவர். கடந்த 7-ந் தேதி மாலை இவருடைய மகன்கள் வீட்டு முன்பு அமர்ந்து கேரம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக அந்த தெருவில் சென்றனர். அதை பார்த்த செல்வமுருகன், மோட்டார் சைக்கிள் களில் சென்ற இளைஞர்களை அழைத்து கண்டித்தார்.
அப்போது செல்வமுருகனுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் தெருவில் கிடந்த கல்லை எடுத்து செல்வமுருகனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி விட்டனர். இதில் செல்வமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த குழந்தைராஜ், நவீன்பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே செல்வமுருகனின் உடல்நிலை மோசமானதால், மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதோடு செல்வமுருகனை தாக்கியதாக ஆரோக்கியமாதாதெருவை சேர்ந்த பிரின்ஸ்நிதிராஜ், ஜேம்ஸ், கிறிஸ்டோபர், டோனால்டு ஆகிய மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.