மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த சேலம் தொழிலாளர்கள் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை

மராட்டிய மாநிலத்தில் இருந்து பஸ், ரெயிலில் வந்த சேலம் தொழிலாளர்கள் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Update: 2020-05-11 05:26 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் அரசின் அனுமதியுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், பிற மாநிலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியோடு தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி மராட்டியம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 479 தொழிலாளர்கள் அங்கிருந்து 16 பஸ்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கொரோனா பரிசோதனை

தொடர்ந்து அவரவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 12 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது விவரங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 தொழிலாளர்கள் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைபடுத்துவதற்கான மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகு அவர்கள், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 173 தொழிலாளர்களை அந்த மாநிலத்தில் இருந்து வந்த 16 பஸ்களின் மூலம் உரிய அனுமதியுடன் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி வழியாக வந்தவர்கள்

இதே போல மராட்டிய மாநிலம் சோளாப்பூரிலிருந்து ரெயில் மூலம் நேற்று காலை திருச்சிக்கு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 49 தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் சேலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைபடுத்துவதற்கான மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தொழிலாளர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் சப்-கலெக்டர் சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்