ஊரடங்கை தளர்த்தினாலும் கவனமாக இருக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை

ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டாலும் பொதுமக்கள் மிக கவனமாக இருந்து கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Update: 2020-05-10 22:00 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் அன்னையர் தினத்தையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மகளிர் திட்ட குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வங்கிக் கடன், இலவச வீட்டு மனைப் பட்டா, விதவை, ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. முருகானந்தம், மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் பேசும் போது, உலக அன்னையர் தினத்தில் தன்னலம் கருதாமல் சேவை செய்து வரும் மகளிருக்கு சுய உதவிக்கடன் வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் 4 லட்சம் முக கவசங்களை தயாரித்து கொடுத்துள்ளனர். இந்த ஊரடங்கு கட்டுப்பாடு சோதனை காலம் ஆகும். இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். சுய கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து கொரோனாவிடம் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். என்றார்.

முடிவில் தாசில்தார் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

திருமங்கலம் நகர் சந்தை பேட்டை பகுதியில் உள்ள மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அரிசி தொகுப்பை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், திருமங்கலத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரும் குணம் அடைந்து விட்ட நிலையில், அரசு அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்பு அங்கு விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுருளிநாதன், ஆர்.டி.ஓ. சவுந்தர்யா, போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், தாசில்தார் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்