மராட்டியத்தில் ஊரடங்கால் சிக்கி தவித்தவர்கள் சிறப்பு ரெயில் மூலம் 962 தொழிலாளர்கள் திருச்சி வந்தனர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2020-05-11 03:05 GMT
திருச்சி, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

40 நாட்களாக தவிப்பு

அனைத்து மாநிலங்களிலும் பஸ், ரெயில், விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தவித்து வந்தனர்.

இதனால் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை ரெயில்களில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

சிறப்பு ரெயிலில் திருச்சி வந்தனர்

அதன்படி மராட்டிய மாநிலம் சோழாப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த தமிழகத்தின் 34 மாவட்டங்களை சேர்ந்த 962 தொழிலாளர்களை சிறப்பு ரெயில் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் நேற்று மராட்டிய மாநிலத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அங்குள்ள பந்தர்ப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் புறப்பட்ட அவர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தனர். முதலாவது பிளாட்பாரத்தில் ரெயிலில் இருந்து தொழிலாளர்கள் இறங்கியதும் சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியே வந்தனர். அப்போது அவர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு காலை உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

30 பஸ்களில் அனுப்பி வைப்பு

ரெயில் நிலையத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியே வருவதற்கு முன்பு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக எந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டும் என கேட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 30 அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக சிறப்பு ரெயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி ரெயில்வே கோட்ட முதன்மை மேலாளர்கள் நரேன், பூபதிராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன், ரெயில்வே மருத்துவ சுகாதார அதிகாரி கல்யாணசுந்தரம் ஆகியோர் வரவேற்று அனுப்பி வைத்தனர்.

14 நாட்கள் தனிமை

ரெயிலில் வந்த 962 பேரில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 29 பேர் உள்ளனர். இந்த 29 பேரும் பஸ்சில் ஏற்றப்பட்டு கள்ளிக்குடி கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்களை பஸ்களில் அழைத்து சென்று அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்