முதியவர் உடலுடன் வந்த ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம் உடன் வந்த 13 பேருக்கு சளி மாதிரி சேகரிப்பு
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் முதியவர் உடலுடன் வந்த ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் உடன் வந்த 13 பேரிடம் சளி மாதிரி சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் முதியவர் உடலுடன் வந்த ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் உடன் வந்த 13 பேரிடம் சளி மாதிரி சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து வருகை அதிகரிப்பு
சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், அங்குள்ளவர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களால் கொரோனா பரவும் அச்சம் குமரி மாவட்ட மக்களிடையே உள்ளது.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அதே சமயத்தில், அங்குள்ள அண்ணா கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களிடம் சளி, ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது.
ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம்
இதனையடுத்து அந்த நபர்கள் தனிமைப்படுத்தும் மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி உடலுடன் வந்த ஆம்புலன்ஸ் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது. அதனை போலீசார் மடக்கி பிடித்ததோடு, ஆம்புலன்சில் வந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனையை முடித்த பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் முதியவர் உடலுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்திய ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி போலீசார், அதோடு பின் தொடர்ந்து வந்த உறவினர்களின் 3 கார்களையும் நிறுத்தினர்.
கொரோனா பரிசோதனை
பின்னர் நடத்திய விசாரணையில், சென்னை சாலிகிராமத்தில் இருந்த போது மாரடைப்பால் பொன்னப்பன் (வயது 60) என்பவர் பலியானார்.
பின்னர் சொந்த ஊரான தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையில் இறுதி சடங்கு மேற்கொள்ள அவரது உடலுடன் வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து உடன் வந்த 13 பேரிடம் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.