மராட்டிய மாநிலத்தில் தவித்த 22 தொழிலாளர்கள், பஸ்சில் கோவை அழைத்துவரப்பட்டனர்
மராட்டிய மாநிலத்தில் தவித்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களில் 22 பேர் அரசு பஸ் மூலம் கோவை அழைத்து வரப்பட்டனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பஸ், ரெயில், விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மராட்டியம் மாநிலம் சங்லி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 440 தமிழர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, மராட்டிய மாநிலத்தில் தவித்த தமிழக தொழிலாளர்களை மீட்க 16 அரசு பஸ்கள் மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தமிழர்களை அந்த மாநில சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்ததும் தமிழகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு கடந்த 8-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழக அரசு பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டன.
2 இருக்கைகள் கொண்ட இடத்தில் ஒருவர் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு பஸ்சில் அதிகபட்சம் 25 முதல் 30 பேர் வரை ஏற்றப்பட்டனர். 16 பஸ்களில் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 440 பேர் அழைத்து வரப்பட்டனர்.
இதில் கோவையை சேர்ந்த 18 பேரும், நீலகிரியை சேர்ந்த 4 பேரும் என 22 தொழிலாளர்கள் ஒரு அரசு பஸ்சில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களை சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பஸ்சில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மராட்டியத்தில் இருந்து திரும்பி வந்த தொழிலாளர்கள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக மராட்டியத்தில் தவித்தோம். எங்களுக்கு சில நிறுவனத்தினர் உணவு, தண்ணீர் வழங்கி உதவினர். சிலருக்கு சரியாக உணவுகிடைக்க வில்லை. தற்போது சொந்த ஊருக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
இது போல் மாலத்தீவில் தவித்த இந்தியர்களை மீட்க கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த 52 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் கப்பலில் நேற்று காலை கொச்சின் துறைமுகம் வந்தடைந்தனர். அங்கிருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொச்சியில் இருந்து சமூக இடைவெளியுடன் 52 பேரும் பஸ்சில் அமர வைக்கப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 3 பேர் மட்டுமே கோவையையும், மற்றவர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கோவையில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் கொரோனா தொற்று யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஆனாலும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றனர்.