நிலைகுலைந்து நிற்கும் லாரித்தொழில்
அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளதால் லாரி தொழில் நிலைகுலைந்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பிரச்சினையால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் தொழில்கள் முடக்கப்பட்டு, வருமானத்தை இழந்து, மீண்டும் தலைதூக்க முடியுமா? என்ற நிலையில் தொழில் புரிபவர்கள் உள்ளனர். குறிப்பாக லாரி வைத்து தொழில் செய்பவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் லாரி தொழிலில் நேரடியாகவும், அதைச் சார்ந்தும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் லாரிகள் ஓடுகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளனர், சரக்கு ஏற்றி இறக்கும் கலாசு தொழிலாளர்கள், சரக்கு புக்கிங், மெக்கானிக், பெயிண்டர், உதிரி பாகம் விற்பனை, என 26 வகை தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்சமயம் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்கு மட்டும் லாரிகள் குறைந்த எண்ணிக்கையில் ஓடுவதால், லாரி வைத்து தொழில் செய்பவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் 47 உள்ளது. இதில் தேதி காலாவதியான டோல்கேட்டுகளை அகற்றாமல், தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலித்து வருகிறார்கள். லாரி தொழில் செய்வது என்பது கடும் போராட்டமாக உள்ளது. பிற மாநிலங்களுக்கு செல்லும் போது ஆள் நட மாட்டம் குறைந்த நெடுஞ்சாலைகளில் வழிப்பறி கும்பல்களின் கைவரிசை, சில சமயம் டிரைவர்களை கொலை செய்து விட்டு, சரக்குடன் லாரியை கடத்தி சென்று விடுகின்றனர்.
இது தவிர சாலை விபத்துகளால் ஏற்படும் வழக்குகளால் மன உளைச்சல், பணச்செலவு போன்ற பல பிரச்சினைகளை சந்தித்துத் தான் லாரி தொழிலை செய்ய வேண்டியதுள்ளது.
இந்தநிலையில் ஊரடங்கால் லாரிகள் ஓடாதது இந்த தொழிலே நிலைகுலைந்துவிட்டது. கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் உள்ளன. தற்போது 1000 லாரிகள் மட்டும் ஓடுகிறது. 14 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களுக்கு முழுமையாக சென்றால் தான் நிலைமை சீராகும். தற்போது உணவுப் பொருள் கொண்டு செல்லப்படும் லாரிகள், கியாஸ் லாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. லாரி தொழில் முடங்கினால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட எந்த பொருளும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல முடியாது. கடந்த 45 நாள் தொழில் முடக்கத்தில் இருந்து மீண்டும் லோடு கிடைத்து சகஜ நிலை வர இன்னும் 3 மாதத்திற்கு மேல் ஆகும். சில காலமாக லாரி தொழிலுக்கு டிரைவர், கிளனர் கிடைப்பதில்லை. ஆகவே லட்சகணக்கானவர்களுக்கு வாழ்வு அளிக்கும் லாரி தொழில் நசிவடையாமல் காப்பாற்றப்பட , அரசு லாரி நல வாரியம் அமைத்து, லாரி தொழிலுக்கு சலுகைகள் அளித்து, லாரி உரிமையாளர்களையும் அதை சார்ந்தவர் களையும் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.