டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்

கூடலூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2020-05-10 22:00 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையில் கலெக்டரின் உத்தரவின்படி கூடலூர் நகராட்சியில் வீடு, வீடாக சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். மேலும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பின்பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு உத்தரவிட்டனர். ஆனால் அவர் அகற்றவில்லை.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 18 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வைத்து இருந்ததாக வியாபாரி உசேன் என்பவருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் அவரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்