பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ வெளியிட்டது யார்? என போலீஸ் விசாரணை

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை வெளியிட்டவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-05-11 01:12 GMT
நாகர்கோவில், 

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை வெளியிட்டவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச படம்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் பெண்களை ஆபாச படம் எடுத்தது, ஆபாச படத்தை காட்டி பணம் பறித்தது உள்ளிட்ட வழக்குகள் கோட்டார் மற்றும் நேசமணி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் மற்றும் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே காசியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது டாக்டர் மற்றும் என்ஜினியர் ஆகியோரை மிரட்டி பணம் பறிப்பது போல பல பெண்களிடம் நெருங்கி பழகி பணம் மற்றும் நகையை காசி பறித்தது தெரியவந்தது. அதோடு அவர் மீது கந்து வட்டி மற்றும் மோசடி வழக்கும் பதிவாகியது. இதனால் காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நண்பர் கைது

இந்தநிலையில் காசி மீது மாணவி உள்பட மூன்று பெண்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே சமயத்தில் போலீஸ் காவல் விசாரணையில், காசி பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காசிக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் டேசன் ஜினோ (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 நண்பர்களை தேடி வருகிறார்கள்.

ஆடியோ

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காசி பேசியதாக எடிட் செய்யப்பட்ட ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஆடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.

அதாவது, பெண்ணை நீ வேண்டுமானால் பயன்படுத்திக் கொள் என்று நண்பர்களிடம் பேசுவதும் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அதோடு அவர் கோபத்தில் பெண்களை தகாத வார்த்தையில் திட்டுவது போன்றும், “எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்து இருக்கிறார்கள். நமக்காக அந்த அளவு அடிமையாக உள்ளார்கள்“ என்று பேசுவது போலவும் ஆடியோ ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு ஆடியோவிலும் காசி பேசுவது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

கவனத்தை திசை திருப்ப...

ஆனால் இந்த ஆடியோக்களை வெளியிட்டது யார்? என்ற விவரம் தெரியவில்லை. காசி பற்றி புகார் அளித்து வரும் பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த ஆடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

காசி பயன்படுத்திய லேப்டாப், செல்போன், ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க எடிட் செய்யப்பட்ட ஆடியோ வெளியான சம்பவத்தின் பின்னணியில் காசியின் கூட்டாளிகள் யாரேனும் இருப்பார்களோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காசி பேசியதாக வெளிவந்த ஆடியோவை அவரை பிடிக்காதவர்கள் யாரேனும் சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கலாம். மேலும் இந்த சம்பவத்தில் காசியின் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. காசி பலரிடம் பேசியதை ரிக்கார்டு செய்து வைத்துள்ளார். எனவே தற்போது வெளியான ஆடியோ யாருடன் பேசியது? எப்போது பேசியது? என்று சரியாக தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது“ என்றார்.

மேலும் செய்திகள்