சிதிலமடைந்து காணப்படும் பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் வேண்டுகோள்

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சிதிலமடைந்து காணப்படும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;

Update: 2020-05-11 00:18 GMT
திருவண்ணாமலை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை.

திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

தற்போது இந்த பஸ் நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. மக்கள் நிற்கும் நிழற்குடைகள் சில இடங்களில் விரிசல்கள் விட்டும், பெயர்ந்தும் உள்ளது. பஸ் நிலையத்தின் முன் பகுதியிலும் விரிசல்கள் காணப்படுகிறது. இதனை காணும் போது பஸ் நிலையம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்படுகிறது.

மேலும் இந்த பஸ் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சீரமைக்கப்பட்டது. ஆனால் அது ஒரு வருடம் கூட தாங்க வில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது உள்ள ஊரடங்கில் அரசு மூலம் சில விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

பஸ் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தை முழுமையாக சீரமைக்கலாம். ஆனால் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளது.

மேலும் பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உள்ளதா என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்பட்ட பின் இந்த பஸ் நிலையத்திற்கு மக்கள் அதிகம் பேர் வருவார்கள். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து தனி கவனம் செலுத்தி பஸ் நிலையத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்