விருதம்பட்டு பாலாற்றங்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை - கள்ளத்தொடர்பு காரணமா? போலீஸ் விசாரணை
விருதம்பட்டு பாலாற்றங்கரையோரம் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளத்தொடர்பு தகராறில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்பாடி,
வேலூர் காட்பாடி பகுதியில் உள்ள விருதம்பட்டு பாலாற்றங்கரையோரம் சர்க்கார் தோப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் வஞ்சூர் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 28) என்பதும், அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் சன்னியை போலீசார் வரவழைத்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட சுனிலுக்கும், சர்க்கார் தோப்பு பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்ட அந்த பெண்ணின் கணவரை சுனில் அடித்து துரத்தி உள்ளார். தற்போது அவர்கள் வசித்த வீடு பூட்டப்பட்டுள்ளது. அதை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ரத்தக்கறையும், அதை சுத்தம் செய்ததற்கான அடையாளமும் இருந்தது. எனவே அவர்களை பிடித்தால் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என்றனர். இந்த கொலை குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மற்றும் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.