வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-05-10 23:37 GMT
வேலூர்,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள மடத்துவிளை கிராமத்தை சேர்ந்தவர் நிக்கோலஸ். இவரது மகள் ரெமோ (வயது 49). இவரது ஊரை சேர்ந்த ஒரு பெண் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை கவனித்துக் கொள்ள ரெமோ வேலூர் வந்தார். அவர் வேலூர் அருகே புதுவசூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி தினமும் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விட்டு, பின்னர் மாலையில் விடுதிக்கு கிளம்பினார். புதுவசூரில் உள்ள சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை மோட்டார்சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திடீரென மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ரெமொ அருகே சென்று, அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ரெமோ சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதனால் பயந்து போன கொள்ளையர்கள் வேகமாக சங்கிலியை இழுத்தனர். அப்போது சங்கிலி அறுந்தது. ரெமோ கையில் ஒரு பாதியும், கொள்ளையர்கள் கையில் ஒரு பாதியும் சிக்கிக் கொண்டது.

கையில் கிடைத்த 5 பவுன் நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ரெமோ சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளில் வந்து கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்