பொங்கல் கரும்பு நடவு செய்வதற்கு விதைகரும்புகள் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்
பொங்கல் கரும்பு நடவு செய்வதற்கு விதை கரும்புகள் தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
பொங்கல் கரும்பு நடவு செய்வதற்கு விதை கரும்புகள் தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பொங்கல் கரும்பு
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கரும்பு, வாழை, வெற்றிலை, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் கரும்பும் சாகுபடி செய்யப்படுகின்றன.
வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு போன்ற பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 700 ஏக்கரில் நடவு செய்யப்படும். இந்த கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும்.
விதை கரும்புகள்
இப்போது நடவு செய்தால் தான் ஜனவரி மாதம் அறுவடைக்கு தயாராகி விடும். இதையடுத்து தஞ்சை பகுதிகளில் தற்போது பொங்கல் கரும்பு நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இதற்காக விதை கரும்புகள் தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக எற்கனவே சாகுபடி செய்யப்பட்டு இருந்த கரும்புகளை வெட்டி எடுத்து அதை, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி விதை கரும்புகளாக தயார் செய்து வருகிறார்கள். ஒரு கரும்பை 5 அல்லது 6 துண்டுளாக வெட்டி வருகிறார்கள். வெட்டப்பட்ட கரும்புகளை ஒரு இடத்தில் குவியலாக வைத்துள்ளனர்.
ஓரிரு நாளில் நடவு
இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதை கரும்புகளை தயார் செய்து நடவு செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கரும்புகள் நடவு செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.