செய்யாறு அருகே 3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு - டிரைவர்கள் படுகாயம்; 4 பேர் கைது

செய்யாறு அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 3 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பஸ் டிரைவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-05-10 23:08 GMT
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு பகுதியில் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் 11 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு அமுல்படுத்தியதால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நிறுவனங்கள் இயங்க தொடங்கியது.

இதனால் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்கள் மூலமாக தங்களுடைய கிராமத்தில் நோய்தொற்று ஏற்படும் என்றும், ஊரடங்கு காலம் முடியும் வரை நிறுவனங்களை இயக்க வேண்டாம் எனவும் அந்தப்பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இதனை நிறுவனங்கள் ஏற்கமறுத்து உரிய பாதுகாப்புடன் நிறுவனங்களை இயக்குகிறோம், விருப்பமுள்ள தொழிலாளர்கள் பணிக்கு வரலாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களை அழைத்துவர அந்தந்த கிராமங்களுக்கு பஸ் சென்று வந்தபோது பல கிராமமங்களில், பணியாளர்களை ஏற்றிச்செல்ல தங்கள் கிராமத்திற்கு பஸ் வரக்கூடாது என கிராமமக்கள் மரத்தைவெட்டி சாலையில் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிப்காட் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ராந்தம் கிராமத்தின் வழியாக பஸ் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து பஸ் மீது கல்வீசி உள்ளனர். இதில் 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தது. அதே போல பெருங்கட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற பஸ் மீதும் மர்ம ஆசாமிகள் கல்வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

இதில் டிரைவர்கள் தணிகைமலை, பார்த்தசாரதி மற்றும் பிரசாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பி.சுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

இது குறித்த புகாரின் பேரில் மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த ஞானமுருகன், மோகன்ராஜ், சுந்தரமூர்த்தி, சந்துரு ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இதே போல நேற்று முன்தினம் அனப்பத்தூர் கூட்ரோட்டில் சிப்காட் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்சினை சிலர் வழிமறித்து பணிக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்