திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது பிடிக்காமல் பட்டதாரி பெண் விஷத்தை தின்று தற்கொலை
தஞ்சை அருகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது பிடிக்காமல் பட்டதாரி பெண் விஷத்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.;
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது பிடிக்காமல் பட்டதாரி பெண் விஷத்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி பெண்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வளவநல்லூர் ரோட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு. விவசாயியான இவர், தஞ்சை மாவட்டம் குருங்குளம் கிழக்கு நாயக்கர் பட்டி சாலையில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்தோடு தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.இவருடைய 2-வது மகள் சிவரஞ்சனி (வயது22). பி.ஏ. பட்டதாரியான இவர் தனது பெற்றோருடன் விவசாய தோட்டத்திலேயே வசித்து வந்தார்.
சிவரஞ்சனி மேற்படிப்பு படிக்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவருடைய பெற்றோர் சிவரஞ்சனிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக குடும்ப சூழல் கருதி பெற்றோர் தனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தது சிவரஞ்சனிக்கு பிடிக்காமல் மனவருத்தத்தை அளித்துள்ளது.
விஷத்தை தின்று தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வெளியே சென்றிருந்த போது வீட்டில் சிவரஞ்சனி குருணை மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவரஞ்சினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.