உளுந்தூர்பேட்டையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது; சிறுமி பலி டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் சிறுமி பலியானாள். மேலும் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-05-10 22:53 GMT
உளுந்தூர்பேட்டை,

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி மேனகா (வயது 40). இவர்களுக்கு லோகேஷ்(16), ஜெகதீசன் (14) என்ற 2 மகன்களும், அமுதினி(12) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மேனகா தனது மகன்கள் மற்றும் மகளுடன் ஒரு காரில் சென்னையில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டார். அந்த காரில் சென்னை தசரதபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி ராணி(25), அவரது மகள்கள் ஆர்ஷிதா(4), தனுஷியாயி(1½) ஆகியோரும் பயணம் செய்தனர். காரை உசிலம்பட்டியை சேர்ந்த பாலன்(35) என்பவர் ஓட்டினார்.

அந்த கார் நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பாலன் மற்றும் காரில் பயணம் செய்த மேனகா, ராணி உள்ளிட்ட 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.

சிறுமி பலி

இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி அமுதினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் படுகாயமடைந்த மற்ற 7 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்