2 பாம்புகளை கடித்து கொன்றது: எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றி தன்னுயிரை துறந்த நாய்

பூதலூர் அருகே எஜமானரின் வீட்டுக்குள் செல்ல முயன்ற 2 பாம்புகளை கடித்து கொன்ற நாய், விஷம் ஏறியதில் பரிதாபமாக இறந்தது.

Update: 2020-05-10 22:46 GMT
திருக்காட்டுப்பள்ளி, 

பூதலூர் அருகே எஜமானரின் வீட்டுக்குள் செல்ல முயன்ற 2 பாம்புகளை கடித்து கொன்ற நாய், விஷம் ஏறியதில் பரிதாபமாக இறந்தது.

பாம்புகளை கடித்து கொன்ற நாய்

தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயிலடி பழைய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி(வயது 64). இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை அவரது நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

இதனால் திடுக்கிட்டு கண்விழித்த கோவிந்தசாமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் ஒரு நல்ல பாம்பு மற்றும் ஒரு கண்ணாடி விரியன் பாம்பு என கொடிய விஷம் உடைய 2 பாம்புகளுடன் நாய், கடுமையாக சண்டை போட்டு கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நீண்ட நேரம் பாம்புகளுடன் போராடிய நாய், அவைகளை கடித்து குதறி கொன்றது.

நாயும் இறந்தது

நாய் கடித்ததில் இரண்டு பாம்புகளும் துண்டு, துண்டானது. பாம்புகள் கடித்ததில் விஷம் ஏறியதால் சிறிது நேரத்தில் நாயும் சுருண்டு விழுந்து இறந்தது.

தாங்கள் ஆசை, ஆசையாக வளர்த்த நாய், தங்களை காப்பாற்றி அது உயிர் துறந்ததை கண்டு கோவிந்தசாமியும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இறந்த நாயை தங்கள் வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்தனர்.

6 ஆண்டுகளாக...

இதுகுறித்து கோவிந்தசாமி கூறுகையில், நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக இந்த நாயை வளர்ந்து வந்தோம். பகலில் நாயை கட்டி வைப்போம். இரவில் பாதுகாப்புக்காக அவிழ்த்து விட்டு விடுவோம். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு நாயை அவிழ்த்து விட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தோம். நேற்று அதிகாலை அதிக சத்தத்துடன் நாய் குரைத்து கொண்டிருந்தது.

இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்து நான் பார்த்தபோது 2 பாம்புகளுடன் நாய் சண்டை போட்டு கொண்டிருந்தது. இறுதியில் 2 பாம்புகளையும் நாய் கடித்து குதறி துண்டு துண்டாக்கியது. பாம்புகள் கடித்ததில் விஷம் ஏறியதால் நாயும் சுருண்டு விழுந்து சிறிது நேரத்தில் இறந்தது.

சோகம்

இந்த நாய் மட்டும் இல்லை என்றால் 2 பாம்புகளும் எனது வீட்டுக்குள் புகுந்து எனது குடும்பத்தினரை கடித்து கொன்று இருக்கும். எங்களுக்காக பாம்புகளுடன் போராடி தனது உயிரை விட்ட நாயை எங்கள் வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்து விட்டோம் என்று கண்ணீர் மல்க கூறினார். எஜமானரின் வீட்டுக்குள் செல்ல முயன்ற பாம்புகளை கடித்து கொன்ற நாயும் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்