கொரோனா நிவாரணத்தொகை கிடைக்காத அமைப்பு சாரா தொழிலாளர்கள் விவரங்களை அனுப்பலாம்: அதிகாரி தகவல்

கொரோனா நிவாரணத்தொகை கிடைக்காத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது விவரங்களை அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையர் ஜெ.காளிதாஸ் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-05-10 22:30 GMT
நெல்லை, 

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு நிவாரண நிதி வழங்க சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுனர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா நலவாரியம் உள்ளிட்ட 17 நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரணத்தொகை ரூ.1,000 (இரு முறை) அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கண்ட வாரியங்களில் பதிவு செய்து நடப்பில் உள்ள 60 வயது நிரம்பாத தொழிலாளர்களுக்கு நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலமாக பணம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுவரை சிறப்பு நிவாரணத்தொகை பெறாத, தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து நடப்பில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் தங்களது செல்போன் எண், வாரிய அடையாள அட்டையின் நகல் மற்றும் வங்கி கணக்கு நகல் ஆகியவற்றை 6385490143, 9486018998, 9500847806 என்ற வாட்ஸ்-அப் எண்களுக்கோ அல்லது Losssmanual@gmail.com , Lossstail@gmail.com , Losssstve@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே கொரோனா சிறப்பு நிதி வங்கி கணக்கில் வரப்பெற்றவர்கள் மீண்டும் மேற்படி விவரங்கள் அனுப்ப வேண்டாம். மேலும் புதிதாக மேற்படி விவரங்கள் அனுப்புபவர்கள் ஏதாவது ஒரு வாட்ஸ்-அப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் விவரங்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொழிலாளர்கள் மேற்படியான வாட்ஸ்-அப் எண்களுக்கு போன் செய்ய வேண்டாம் என்றும், பொதுமக்கள் யாரும் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அமைப்பு சாரா நலவாரியங்களில் பதிவு செய்து பதிவு நடப்பில் உள்ள அதே வேளையில் இதுவரை கொரோனா சிறப்பு நிதி பெறாத நபர்கள் மட்டும் விவரங்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்