செங்குன்றம் அருகே, பிரபல ரவுடி வெட்டிக்கொலை

செங்குன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-05-10 23:00 GMT
செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால கணேஷ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மணி என்ற கஞ்சா மணி(வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளும், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் ரவுடி மணி நேற்று மாலை செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள்கோவில் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணியை சுற்றி வளைத்தது. இதனால் பயந்துபோன அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம கும்பலிடம் அவர் தனியாக சிக்கிக்கொண்டார்.

மர்ம நபர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த அரிவாளால் மணியை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, தோள்பட்டை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மணி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர், இறந்துவிட்டதை உறுதிசெய்த அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் கொலையான மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இவருக்கும், எதிர்கோஷ்டியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடி ஒருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக மாமூல் பிரச்சினையில் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்