எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடர்களையும் தடுமாற வைத்த கொரோனா! - அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்க்க வலியுறுத்தல்

எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடர்களையும் கொரோனா ஊரடங்கு தடுமாற வைத்து விட்டது. வறுமையில் வாடும் அவர்கள் தங்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்த்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2020-05-10 22:30 GMT
தென்காசி, 

வானில் உள்ள கோள்கள், நட்சத்திரங்களின் நகர்வுகளானது உலகில் உள்ள உயிரினங்கள் மீதும், அவற்றின் செயல்பாடுகள் மீதும் ஏற்படும் தாக்கத்தை பற்றி ஆராய்ந்து கூறுவதே ஜோதிடத்தின் அடிப்படையாகும். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுடன் 5-வதாக ஜோதிடமும் வேதமாக கருதப்படுகிறது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பில் சிறந்து விளங்கினார்.

குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக்கிரகங்களின் நிலையைக் கணக்கிட்டு, குழந்தையின் ராசி, நட்சத்திரம், இலக்கணம் குறிக்கப்பட்டு ஜாதகம் எழுதப்படுகிறது. மேலும் எண் ஜோதிடம், பெயர் ஜோதிடம், கிளி ஜோதிடம், நாடி ஜோதிடம், கைரேகை ஜோதிடம் என்று பல்வேறு முறைகளிலும் ஜோதிடர்கள் எதிர்காலத்தை கணித்து கூறுகின்றனர்.

ஆராய்ச்சி படிப்பு

பழங்காலத்தில் இருந்தே வானவியலையும், ஜோதிடத்தையும் இரு கண்களாக பாவித்து ஜோதிடர்கள் எதிர்காலத்தை கணித்து கூறி வருகின்றனர். முதல் ஜோதிட மாமுனிவரான அகத்தியர் காலத்தில் இருந்து தற்போது வரையிலும் ஜோதிடம் பல்வேறு பரிணாமங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜோதிடவியல் குறித்து பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இளநிலை பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. அவற்றில் படித்த பலரும் ஜோதிடத்தில் தலைசிறந்து விளங்குகின்றனர்.

எந்தவொரு விழாக்களையும், சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு முன்பாக, ஜோதிடர்களிடம் கருத்துகளை கேட்டு, சுபமுகூர்த்த தினத்தில் நல்ல நேரத்தில் நடத்துவார்கள். மேலும் திருமணத்துக்காக மணமக்களின் ஜாதகம் மூலம் பொருத்தம் பார்ப்பார்கள். ஒவ்வொருவரும் எந்த தொழில் செய்தால் சிறந்து விளங்கலாம்?, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது குறித்து ஜோதிடர்கள் கணித்து கூறுவார்கள். ஜோதிடர்களின் துல்லிய கணிப்புகளுக்கு ஏற்ப, அவர்களிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக பலரும் முன்பதிவு செய்து நாட்கணக்கில் காத்து கிடப்பார்கள்.

வருமானமின்றி தவிப்பு

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட விழாக்களும், சுப நிகழ்ச்சிகளும் மட்டுமே எளிமையான முறையில் நடைபெறுகிறது. புதிதாக எந்தவொரு விழாக்களை நடத்துவதற்கும், திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பதற்கும் யாரும் முன்வருவது இல்லை. இதனால் ஜோதிடர்கள் எந்தவித வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு ஊர்களுக்கும் சென்று, ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ஜோதிடர்கள் வெளியூர்களுக்கு சென்று வர முடியாததால், வருமானமின்றி தவித்து வருகின்றனர். எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடர்களை கொரோனா தடுமாற வைத்து விட்டது.

இதுகுறித்து தென்காசியைச் சேர்ந்த திருவள்ளுவர் பாரம்பரிய கால கணித தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் மாடசாமி கூறியதாவது:-

நிவாரண உதவி

எங்களது கூட்டமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஜோதிடத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள். இவர்கள் பல்வேறு ஊர்களுக்கும் சென்று, திருமண விழா, புதுமனை புகுவிழா, காதணி விழா உள்ளிட்ட விழாக்களுக்கு நல்ல நாள், நேரம் பார்த்து குறித்து கொடுப்பார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்படுவதால், எந்தவித வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடுகிறோம்.

ஜோதிடர்களை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை. இதனால் அரசின் நிவாரண உதவி எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ரேஷன் கடையில் வழங்கிய ரூ.1,000 மற்றும் உணவுப்பொருட்களை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே, ஜோதிடர்களை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்