குரல் ஒலிப்பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதி - மந்திரி ஆர்.அசோக் தகவல்

கர்நாடகத்தில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்

Update: 2020-05-10 23:45 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. மாநில அரசு சிறிது சிறிதாக ஊரடங்கை தளர்த்தி வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கை பெங்களூருவில் நேற்று கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பிரவீன்குமார், துணைத்தலைவர் எம்.ஜி.ராமமூர்த்தி, செயலாளர் கே.மஞ்சு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் ஏ.கணேஷ், கர்நாடக திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு துணைத்தலைவர் ரவிசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

விதிமுறைகளை பின்பற்ற...

அப்போது அவர்கள், கன்னட திரைப்பட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய மந்திரி ஆர்.அசோக், “கர்நாடகத்தில் கெரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் படப்பிடிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்க முடியாது. ஆனால், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் அதாவது காட்சிகளுக்கு குரல் ஒலிப்பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ், ரீரிக்கார்டிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதிக்கிறது. அதே நேரத்தில் இந்த பணிகளின்போது, கொரோனா குறித்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

இதற்கு அனுமதி வழங்கிய முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரி ஆர்.அசோக் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பிரவீன்குமார், கர்நாடகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும், படப்பிடிப்பு தவிர மற்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்