கார்வார் புறநகரில் சம்பவம்: தங்கையை காதலித்த வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற மீனவர் - நண்பர்களுடன் கைது
கார்வார் புறநகரில், தங்கையை காதலித்த வாலிபரை, மீனவர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த மீனவரையும், அவருடைய நண்பர்களையும் கைது செய்தனர்.
கார்வார்,
உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் புறநகர் இர்பா பகுதியைச் சேர்ந்தவர் அனோஜ் நாயக்(வயது 30). இவருடய நண்பர் சூரஜ். மீனவர்களான இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் சூரஜ்ஜின் தங்கையை அனோஜ் நாயக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை சூரஜ் கண்டித்துள்ளார்.
இருப்பினும் அனோஜ் நாயக், சூரஜ்ஜின் தங்கையை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த சூரஜ், அனோஜ் நாயக்கை கொலை செய்துவிட முடிவு செய்தார்.
இதுபற்றி அவர் தனது நண்பர்களும், மீனவர்களுமான வினய் நாயக், சாகர், ரூபேஷ் ஆகியோரிடம் கூறி தனது சதித்திட்டத்தில் அவர்களையும் சேர்த்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சூரஜ், வினய் நாயக், சாகர், ரூபேஷ் ஆகிய 4 பேரும் அனோஜ் நாயக்கை இர்பா கிராமத்தில் ஓடும் காளி ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவருடைய உடலை ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனோஜ் நாயக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சூரஜ் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.