விளைச்சல் குறைவு, விலையும் வீழ்ச்சி: பருத்தி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த விவசாயிகள்

விளைச்சல் குறைந்த நிலையில் விலையும் வீழ்ச்சி அடைந்ததால் பருத்தி செடிகளை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்தனர்.

Update: 2020-05-10 07:00 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், கண்டமனூர், கோவிந்தநகரம், ஜங்கால்பட்டி, காமாட்சிபுரம், தர்மாபுரி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, போடி, தேவதானப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பருத்தியை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்த நிலையில், ஜங்கால்பட்டி, காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வந்தது. பின்னர் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது விலை வீழ்ச்சியடைந்து ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை வீழ்ச்சியால் பருத்தி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பருத்திக்கு தற்போது கிடைக்கும் விலை, பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேநேரத்தில் பராமரிப்பு செலவு அதிகரிப்பதாலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் விளைச்சல் குறைந்துள்ளதாலும் விரக்தி அடைந்த விவசாயிகள் சிலர் தங்களின் தோட்டங்களில் உள்ள பருத்தி செடிகளை வேரோடு உழுது அழித்து வருகின்றனர். அந்த வகையில் ஜங்கால்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தி செடிகளை டிராக்டர் மூலம் உழுது அழிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கோடை மழை கைகொடுத்தால் வேறு சிறுதானியம் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், கோடை மழை கைகொடுக்காவிட்டால் பருவமழை தொடங்கும் வரை நிலத்தை தரிசாக போடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்