ஊரடங்கில் தளர்வு இருந்தும் விற்பனை இல்லாமல் பூ வியாபாரிகள் தவிப்பு

ஊரடங்கில் தளர்வு இருந்தும் விற்பனை இல்லாமல் பூ வியாபாரிகள் தவிக்கின்றனர்.

Update: 2020-05-10 06:14 GMT
திருப்பரங்குன்றம்,

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, திருவிழாக்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூ வியாயாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். அதனால் அவர்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.

இந்த நிலையில், மதுரை நகர்ப்பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பூக்கடை வியாபாரிகளில் 10 சதவீதம் பேர் தங்களது கடையை திறந்து பூமாலைகள் மற்றும் பூக்கள் கட்டி விற்பனை செய்ய தயாரானார்கள். ஆனால் கோவில் பூட்டப்பட்டிருப்பதால் பக்தர்கள் வராத நிலையில் வியாபாரம் இல்லை. ஒரு சிலர் மட்டும் தலையில் வைக்கக்கூடிய பூக்களை மட்டும் வாங்கிச் செல்கிறார்கள். இதில் ரோஜா பூமாலைகளை விற்பனை செய்ய முடியாமல் அதனை கோவில் முன்பு உள்ள சிலைகளுக்கு போட்டுச் செல்கின்றனர். பூ வியாபாரம் மந்தமாக உள்ளதால் வறுமையின் பிடியில் பூ வியாபாரிகள் சிக்கி தவிக்கின்றனர்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், “கோவில்களை திறந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் பூ வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இல்லையேல் காகிதப்பூவாக வாழ்க்கை மாறிவிடும். மேலும் பூ வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்றனர். இதே போல் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறும் போது, “கடந்த ஒன்றரை மாதமாக நாங்கள் படும் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பூ சாகுபடியில் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளோம். பூக்கள் விற்பனையாகாததால் பறிப்பதையே விட்டுவிட்டோம். மகசூல் அனைத்தும் வீணாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை எவ்வாறு ஈடுகட்டுவது என்றே தெரியவில்லை” என்றனர்.

மேலும் செய்திகள்